Tuesday, 7 May 2013

சூது கவ்வும் - விமர்சனம்! - சூப்பர் மாமா!


இயக்குனர் நளன் குமாரசாமி இயக்கத்தில் விஜய சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி உட்பட பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் சூது கவ்வும். திரையிடப்பட்ட தியேட்டர்களில் எல்லாம் அரங்கு நிறைந்த காட்சிகளாக வசூல் அள்ளிக்குவித்துக் கொண்டிருக்கும் ’சூது கவ்வும்’ தமிழ் சினிமாவில் இருக்கும் சில விதிமுறைகளை தகர்த்தெறிந்துவிட்டது. விஜய சேதுபதி நடித்த பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் திரைப்படங்களைப் போலவே நாம் எதிர்பார்க்காத ஒரு பாணியில் சூது கவ்வும் நமது மனதைக் கவ்வுகிறது.


விஜய சேதுபதியின் தலைமையில் இயங்கும் ஒரு கடத்தல் கும்பல், தங்களுக்கென சில விதிகள் விதித்துக் கொண்டு கடத்தல் தொழில் செய்கிறது. பணக்கார பசங்களைக் கடத்தக்கூடாது. பத்தாயிரம், இருபதாயிரம் என அவர்களால் முடிந்த அளவு பணத்தை மட்டும் கேட்கவேண்டும். பணம் கொடுக்கமாட்டேன் என முரண்டு பிடித்தால் அந்த புராஜெக்டை டிராப் செய்துவிட வேண்டும் என்பன அந்த விதிமுறைகள். 

விதிகளுக்குட்பட்டு கடத்திக் கொண்டுவந்து, அவர்கள் வீட்டிற்கு ஃபோன் செய்து ‘உங்களால் முடிந்த பணத்தை கொடுத்தால் போதும்’ என்று நேர்மை தவறாமல் கடத்தல் தொழில் செய்துவரும்போது, எம்.எல்.ஏ M.S.பாஸ்கரின் மகனை கடத்துவதற்கான ப்ராஜக்ட் விஜய சேதுபதி டீமுக்கு வருகிறது. இந்த கடத்தல் விதிகளுக்கு மாறாய் இருந்தாலும் ‘எப்ப தான் நாமளும் வளர்ச்சி அடைவது” என்று ஓகே சொல்லி காரியத்தில் இறங்குகிறது விஜய சேதுபதி தலைமையிலான கடத்தல் கும்பல். 

M.S.பாஸ்கரின் மகனை கடத்த இவர்கள் திட்டம் போட்டு களத்தில் இறங்கும் சமயத்தில், எம்.எல்.ஏ மகனை வேறு ஒரு கடத்தல் கும்பல் கடத்திக்கொண்டு போய்விடுகிறது. எம்.எல்.ஏ மகனே தன்னை ஆள் வைத்து கடத்தி தந்தையிடம் பணம் பிடுங்க போட்ட திட்டம் இது என்பது புது கடத்தல் டீமை தொடர்ந்து செல்லும் விஜய சேதுபதி டீமிற்கு தெரிய வர எம்.எல்.ஏ மகனை அவர்களிடமிருந்து கடத்திக்கொண்டு வந்து M.S.பாஸ்கரிடம் 2 கோடி கேட்கும் விஜய சேதுபதி டீம்.

”என்னையா நீ கட்சி மானத்தை வாங்கிடுவ போல” என்று முதலமைச்சரே கட்சிப்பணத்திலிருந்து 2 கோடி எடுத்து M.S.பாஸ்கரிடம் கொடுத்து அனுப்பிவிடுவார். தனது திட்டம் வீணானாலும் காசு வந்தால் போதும் என நினைக்கும் எம்.எல்.ஏ மகன் விஜய சேதுபதி டீமுடன் சேர்ந்து பிளான் போட்டு அவர்களை ஏமாற்றி 2 கோடியை அபேஸ் செய்து எஸ்கேப் ஆகி விடுவார். ஆனால் விஜயசேதுபதி டீமைப் பிடிக்க நியமிக்கப்பட்ட பிரம்மா என்ற போலிஸ் அதிகாரியிடம் விஜய சேதுபதி டீம் அகப்பட்டு சிறையில் கொடுமைபடுத்தப்படுவார்கள் (காமெடியாக).

விஜய சேதுபதி டீம் போலிஸிடமிருந்து எப்படி தப்பி வருகிறார்கள்?  எம்.எல்.ஏ மகனிடமிருக்கும் 2 கோடி அன்ன ஆகும்?  என்பது தான் காமெடியான கிளைமேக்ஸ்.

இயக்குனர் நளன் தமிழ் சினிமாவிற்கு ’நலன்’ சேர்ப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நினைத்ததை அப்படியே திரையில் காட்டியிருக்கும் நளன் பாராட்டப்படவேண்டியவரே. ஹீரோயிசம், குத்துப்பாட்டு, பஞ்ச் வசனங்கள் இல்லாத ஒரு முழு கமர்ஷியல் படமாக சூது கவ்வும் இருக்கிறது.

சூது கவ்வும் - சூப்பர் மாமா!

No comments:

Post a Comment

Blog Archive

Popular Posts