கற்றது தமிழ் திரைப்படத்திற்குப் பிறகு ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தங்க மீன்கள்’. கௌதம் மேனன் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை ராம் இயக்கியது மட்டுமல்லாமல் நடித்தும் இருக்கிறார்.
தங்கமீன்கள் திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தில் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்கிற பாடலை நா.முத்துகுமார் எழுதியிருக்கிறார். தந்தைக்கும், மகளுக்குமான உறவை விளக்குகிற வகையில் அற்புதமாக இந்த பாடல் படமாக்கப்பட்டிருக்கிறது. தங்கமீன்கள் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் இன்று(30.04.13) நடந்தது.
இயக்குனர் பாலு மகேந்திரா இசைத்தகடை வெளியிட்டார். விழாவில் ரசிகர்களின் கேள்விக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் ’வைரமுத்து, மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து ஆகியோருடன் பணியாற்றுவீர்களா?’ என்று கேட்டதற்கு ‘விரைவில் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன்’ என்று கூறினார்.
இயக்குனர் சேரன் படத்தைப் பற்றி பேசும் போது ‘முதலில் ராம் என்னைத்தான் இந்த திரைப்படத்தில் நடிக்கச் சொன்னார். ஆனால் சில காரணங்களால் அந்த வாய்ப்பு அமையாமல் போனது. படம் பார்த்த பிறகு சொல்கிறேன் இந்த கதாபாத்திரத்திற்கு மிக பொருத்தமானவர் ராம்” என்று கூறினார்.
சமுத்திரக்கனி, பிரபுசாலமன், லிங்குசாமி, வெற்றிமாறன் ஆகியோர் திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இயக்குனர் பாலு மகேந்திரா பேசும் போது “ ராம் எனக்கு மிகவும் பிடித்தமான இயக்குனர். அவருடைய அடுத்த படத்திற்காக காத்திருக்கும் பல ரசிகர்களில் நானும் ஒருவன்” என்று கூறினார்.
No comments:
Post a Comment