Thursday 30 May 2013

குட்டிப்புலி - விமர்சனம் || குட்டிப்புலி - வன்முறை வெறியாட்டத்தின் ரத்தச் சிதறல்!


மீண்டும் கத்தியும் ரத்தமுமாக உலாவரும் ஒரு மதுரை படம். மதுரை ஸ்ரீவில்லிபுத்தூரில் நடக்கிற கதை. மதுரை  அரசியல்வாதியின் அடியாளாக இருக்கும் ஒரு முக்கிய புள்ளி எப்படி வெட்டிக் கொல்லப்படுகிறார் என்பதை கதை அம்சமாக கொண்டிருக்கும் இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார். இந்தப் படத்தை மதுரை ரசிகர்கள் தலையில் தூக்கிக்கொண்டாடப் போவது உறுதி!


ஊருக்குள் ‘சண்டியர்’ தனம் செய்துகொண்டிருக்கும் மாஸ் ஹீரோவாக குட்டிப்புலி (சசிக்குமார்). ஒரு ஊர்ப்பிரச்சனையில், தன் சமூகத்துக்காகவும் தன் இன மானத்திற்காகவும் தன் உயிரையே கொடுத்தவர் தான் குட்டிப்புலியின் அப்பா. சிறுவயதிலேயே தன் அப்பாவை இழந்த குட்டிப்புலி தன் தாயிடம் அளவுகடந்த பாசத்தில் வளர்கிறார். அப்பாவைப் போல இவர் ஊர்ப்பிரச்சனைக்குப் போகக்கூடாது என்பது அம்மா சரண்யாவின் விருப்பம். 

ஆனால் குட்டிப்புலியோ தன் அப்பாவைப்போல ஊருக்காக பல பிரச்சனைகளில் ஈடுபட்டு பல வில்லன்களை சம்பாதித்துக்கொள்கிறார். ’கல்யாணம் செய்துகொண்டால் என் அம்மாவை போல என் மனைவியின் நிலையும் ஆகிவிடும்...’ என்று சொல்லி மாப்பிள்ளை பார்க்க வருகிறவர்களிடம் சில களேபரங்களை நடத்தி தப்பித்துக்கொண்டே வருகிறார். 

அம்மாவுக்கோ குட்டிப்புலிக்கு கல்யாணம் பண்ணிப் பார்க்கவேண்டும் என்பதுதான் லட்சியம். அதற்காக போகாத கோவிலில்ல, வேண்டாத தெய்வமில்ல. இந்த நிலையில் அந்த தெருவுக்கு புதிதாய் குடிவருகிறார் பாரதி (லட்சுமி மேனன்). அந்த தெரு வயசுப்பசங்க அத்தனை பேரும் அவருக்கு ரூட் விடுகிறார்கள், ஆனால் குட்டிப்புலியின் ஹீரோயிசங்கள் லட்சுமி மேனனை மயக்குகிறது. லட்சுமி மேனனிடம் லவ் லெட்டர் கொடுக்க தைரியம் இல்லாத அந்த வயசுப்பசங்க, குட்டிப்புலியை கலாய்க்கும் நோக்கத்தோடு, அந்த லெட்டரை குட்டிப்புலியிடம் கொடுத்து கொடுக்கச் சொல்கிறார்கள். இந்த கலாட்டா ஒருபுறம் இருக்க... 

பாரதியின் கண்முன்பாகவே குட்டிப்புலியை திடீரென ஒரு கும்பல் ரவுண்டுகட்டி சரமாரியாக வெட்டிசாய்க்கிறது. உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில் தன் நகைகளை விற்று பணம் கொடுக்கிறார் பாரதி. அப்டி இப்டின்னு ஒரு கட்டத்தில் காதல் வருகிறது. கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிவந்த குட்டிப்புலியின் கொள்கையெல்லாம் காற்றில் பஞ்சாய்ப் பறக்கிறது! காதல் வந்த பிறகு அவர் செய்யும் அலப்பறைகளுக்கு அளவே இல்லை... 

அம்மாவின் ஆசையும் நிறைவேறியாச்சு... குட்டிப்புலிக்கு காதலும் கைகூடியாச்சு... பிரச்சனை தானா தேடி வருதா, இல்ல பிரச்சனையை தேடி இவங்க போறாங்களா என்பதை புரிஞ்சுக்க முடியாத அளவுக்கு ஒரு பிரச்சனை வருது. இதுவரை தமிழ்சினிமாவில் இல்லாத ஒரு க்ளைமாக்ஸ்! பெண்கள் கண்களை இறுக மூடிக்கொள்வார்கள் என்பது நிச்சயம். படம் முழுக்க ரத்தத்தை தெளித்துவிட்ட இயக்குனர், க்ளைமாக்ஸ் காட்சியில் ரத்தத்தை அண்டாவில் அள்ளி ஊற்றுகிறார். 

படம் முழுக்க ஒரு மாஸ் ஹீரோவாகவே வலம் வருகிறார் சசிக்குமார். ’நான் வயித்துல பொறந்தவன் இல்லடா... வைராக்கியத்துக்குப் பொறந்தவண்டா...’ என்று பஞ்ச் டையலாக்குகளை அள்ளி வீசுகிறார் ( ’ஏ சூப்பர்பா... இதுக்கு முன்னாடி நீ இப்படி பேசி நான் பாத்ததேயில்ல போ...’ என்ற பருத்திவீரன் டையலாக் நினைவுக்கு வந்து போகிறது ). 

சிலம்பு சுற்றுகிற காட்சியில் முடிந்தளவு முயற்சித்திருக்கிறார் சசிக்குமார், இருந்தாலும் அவருக்கு முன்பு ஒரு சின்ன பையன் சிலம்பு சுற்றுவது அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது. காதல் வந்ததும் ஜீன்ஸ், டி-ஷர்ட், ஷூஸ், கூலர்ஸ் என கலக்குறாரு சசிக்குமார். ’அத்த மக, அக்கா மக...’ பாட்டுல சசிக்குமார் போடும் குத்தாட்டத்துக்கு மதுரை மட்டுமில்ல டோட்டல் தமிழ்நாடே அதிரப்போகுது. மாஸ் ஹீரோவாக வலம் வந்தாலும் ஆகாயத்தில் பறப்பது, ஒரே அடியில் பத்துபேரை சாய்ப்பது போன்ற சில்லறைத்தனமான ஹீரோயிசங்களை செய்யாமல், கதையின் எதார்த்தத்தைக் கவனத்தில் வைத்து உஷாராக செயல்பட்டிருக்கிறார். 

படத்தின் காமெடிக்கு உதவுகிறார் பாலா. ’படிக்கிற கதையிலும் பார்க்குற சினிமாவிலும் இந்த பொண்ணுக சல்லிப்பயலுங்களத்தான் லவ் பண்றாளுங்க’ன்னு ரொம்பவும் மெனக்கெடாமல் போகிற போக்கில் காமெடி கமெண்ட் அடிப்பது சுவாரஸ்யம். முத்தம் கொடுத்ததால் உதட்டில் ரத்த காயத்தோடு வரும் சசிக்குமாரைப் பார்த்து ’காதலைக் கூட இவன் வன்முறையாத்தான் ஹேண்டில் பண்றான்’ என்று சொல்வது செம டைமிங்.

தன் மகனுக்கு ஜீன்ஸ் பேண்ட் எடுக்க கடைக்கு போகும் சரண்யா, அங்கே ஷாருக்கானின் போஸ்டரைக் காட்டி ‘என் மகன் அந்த பையன மாதிரி இருப்பான்’ன்னு சொல்வதும், அதுக்கு பக்கத்தில் இருக்கும் ரமேஷ் பிரபா ‘அட போக்கா... நம்ம புள்ள எவ்வளவு முகலட்சணமா இருக்கான்’ன்னு காமெடி வெடி போடுவது சூப்பர். 

அம்மா கேரக்டரில் நடித்திருக்கும் சரண்யாவுக்கு நடிப்பு சொல்லியாத்தரணும், வழக்கம் போலவே விளாசுகிறார். லட்சுமி மேனனின் உயரத்துக்கு ஈடுகொடுக்க சசிக்குமாரே தள்ளாடுகிறார். நம்ம ஊர்க்கார பொண்ணு மாதிரியே அம்சமான முகம். நடிப்புக்கு அதிக அளவு ஸ்கோப் இல்லையென்றாலும் கொடுத்த வேலையை சரியாகவே செய்திருக்கிறார். 

மதுரைக்கு ஏற்ற வில்லனை நச்சுன்னு செலக்ட் பண்ணியிருக்காங்க. ராஜசிம்மன் மிரட்டும் விழிகளோடு வில்லன் கேரக்டருக்கு பக்காவாக பொருந்துகிறார். அரசியல் பேசும் ஒரு சிறுவனை கழுத்தில் குத்திக் கொல்கிற காட்சி அதிர வைத்தாலும் இப்போதிருக்கிற அரசியல் சூழலையும் அதன் மேல் இருக்கும் பயத்தையும் அதிகரிக்கிறது என்றே சொல்லலாம். 

இசை ஜிப்ரான் என்று டைட்டிலில் போடுகிறார்கள். அவர் கடமைக்கு அவரும் ஒரு ஐந்து பாடல்களை கொடுத்திருக்கிறார். ஆனால் படம் முழுக்க வலம் வருகிறது இளையராஜாவின் இசை ராஜாங்கம். சசிக்குமார்-லட்சுமிமேனன் காதல் காட்சிகளுக்கு இளையராஜாவின் ’பொன் ஓவியம்’ முழு பாடலையும் அப்படியே பயன்படுத்தி இருக்கிறார்கள். 

குட்டிப்புலி கலக்‌ஷனில் கல்லா கட்டப்போகும் ஒரு வெற்றிப்படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இன்னும் சில காட்சிகளை கத்தரித்து இருந்தால் படத்தின் சுவாரஸ்யத்தை கூட்டி இருக்கலாம். எதார்த்தமான கதையையும் கமர்ஷியலான ஹீரோயிசங்களையும் கலந்துகட்டி படையல் வைத்திருக்கிறார் புதுமுக இயக்குனர் முத்தையா. கமர்ஷியல் களத்தில் கலெக்‌ஷனுக்கு குறிவைத்து பாய்ந்து வருகிறது இந்த குட்டிப்புலி. 


குட்டிப்புலி - வன்முறை வெறியாட்டத்தின் ரத்தச் சிதறல்!

No comments:

Post a Comment

Blog Archive

Popular Posts