Friday 14 June 2013

தில்லு முல்லு - விமர்சனம்!


இந்தியில் வெளிவந்த ’கோல்மால்’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் ரஜினிகாந்த் நடித்த தில்லு முல்லு. பாலச்சந்தர் ரீமேக் செய்த தில்லு முல்லு திரைப்படத்தை மறுபடியும் தமிழிலேயே ரீமேக் செய்திருக்கின்றார்கள்.பெரிய நட்சத்திரமாக இருந்த ரஜினி நடித்த தில்லு முல்லு திரைப்படத்தை முழுநீள காமெடி திரைப்படமாக எடுத்திருக்கின்றனர். 


எம்.எஸ்.வி, யுவன் ஷங்கர் ராஜா திரையில் ஒன்றாக தோன்றி தில்லு முல்லு டைட்டில் சாங் பாடுவது ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி சீட்டில் நிமிர்ந்து உட்காரவைக்கிறது. ’அகில உலக சூப்பர்ஸ்டார்’ சிவா என டைட்டில் கார்டு போடுவதிலிருந்து கடைசியில் வணக்கம் சொல்லி எண்ட் கார்டு போடுவது வரை படம் பார்ப்பவர்கள் சிரிப்பது உறுதி. 

தில்லு முல்லு திரைப்படத்தின் ஒன்லைன் ஸ்டோரியை வைத்துக்கொண்டு படம் சிரிப்பு வெடிகளுடன் நகர்கிறது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட தில்லு முல்லு திரைப்படத்தை தற்போதைய விஞ்ஞான வளர்ச்சியைக் கொண்டு செதுக்கி இருக்கிறார்கள். 

ஃபுட்பால் போட்டியின் போது தேங்காய் சீனிவசனிடம் ரஜினி சிக்குவது மாதிரி, ஐ.பி.எல் போட்டியின் பார்ட்டியில் சிவா கூத்தடிப்பது செல்ஃபோன் வீடியோவில் பதிவுசெய்யப்பட்டு சிவா பிரகாஷ் ராஜிடம் சிக்குகிறார். ரஜினி மீசை இல்லாமல் ஒரு கதாபாத்திரமாக வருவது போல, காண்டேக்ட் லென்ஸ் உதவியுடன் பூனைக்கண் சிவா வருகிறார்.


80-களில் வாழ்ந்த பெண்ணுக்கு சங்கீதம் சொல்லித்தந்தால் இருபத்தியோராம் நூற்றாண்டில் கராத்தே சொல்லிக் கொடுப்போம் என இஷா டல்வார் கராத்தேவையும் காமெடியாக சொல்லிக்கொடுக்கிறார் சிவா. 

ஒவ்வொரு காட்சியிலும் சிவா பேசும் வசனங்கள் போகிற போக்கில் ஒரு காமெடி. சூரியும் சிவாவுக்கு பக்கபலமாக காமெடியில் கலக்குகிறார். அந்த தில்லு முல்லுவில் கமல்ஹாசன் வருவது போல் இந்த தில்லு முல்லுவில் சந்தானம் வந்து கிளைமாக்ஸை காமெடிக் கொண்டாட்டமாக மாற்றுகிறார்.

ராகங்கள் பதினாறு ரீமிக்ஸ் பாடல் கேட்க நன்றாக இருந்தாலும், சிவாவின் காமெடி நடிப்புக்கு ரொமாண்டிக் பாடல் செட் ஆகவில்லை. எம்.எஸ்.வியின் மெட்டுக்கு யுவன் ஷங்கர் ராஜாவின் பாப் இசை வலு சேர்க்கிறது.


காமெடிக்காவே ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நடிகர், நடிகைகளை செலக்ட் செய்திருக்கிறார்கள். இதில் இஷா டல்வார் மட்டும் எப்படியோ தவறி வந்து சேர்ந்துவிட்டார். லாஜிக் தவறுகளை கண்டுகொள்ளாமல், கே.பி-யின் தில்லு முல்லுவை மறந்துவிட்டு புதிய திரைப்படமாக பார்த்தால் தில்லு முல்லு(2013) கண்டிப்பாக ரசிக்கக்கூடிய எண்டர்டெயினர் திரைப்படம்.

தில்லு முல்லு - பழச மறந்தா புதுச ரசிக்கலாம்!

No comments:

Post a Comment

Blog Archive

Popular Posts